குருணாகலை பகுதியில் கேபிள் கார் விபத்து – ஏழு பேர் உயிரிழப்பு

குருணாகலை – மெல்சிரிபுரவின் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மெல்சிரிபுர, பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் (na Uyana Aranya Senasanaya) இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் இவர்கள் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் இந்தியா, ருமேனியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒரு பௌத்த பிக்கு உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விகாரையில் பிக்குகள் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் கம்பித் தடத்தில் இயங்கும் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்த மேலதிக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.