மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது – மோடி

மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலைமதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன.
மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு நான் தலைவணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் கொண்டுவர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது 7,000 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
மணிப்பூர் சர்வதேச எல்லையைக் கொண்ட ஒரு மாநிலம். போக்குவரத்து இங்க ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. மோசமான வீதிகள் காரணமாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நான் அறிவேன்.
2014 ஆம் அண்டுக்குப் பிறகு மணிப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த நான் பணியாற்றினேன். மேலும், மணிப்பூரின் ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம்.
மணிப்பூரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மணிப்பூர் மலைகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான புதிய வசதிகளை வழங்கும்.
மணிப்பூரில் பணிபுரியும் பெண்களுக்காக நாங்கள் பெண்கள் விடுதியைக் கட்டி வருகிறோம். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபா சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நமது பழங்குடி இளைஞர்களின் விருப்பங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். மணிப்பூரின் கலாச்சாரம் பெண்களின் வலிமையை ஊக்குவிக்கிறது.
மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு, மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து உதவும்” என்றார்.