ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி

ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்த அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் – ட்ரம்ப் அதிருப்தி

பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதித்தார்.

தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி வீதத்தைக் குறைத்தார்.

இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து அதனை 50 சதவீதமாக உயர்த்தினார்.

ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படும், உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அமெரிக்க மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ட்ரம்ப்பின் வரி விதிப்பு முடிவுகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க கூட்டாட்சி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில்,

“உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் ட்ரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார்.

இதனை நியாயப்படுத்தவே, தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்பு சட்டவிரோதமானது. கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும்.

வரிகள் விதிப்பு, அடிப்படையில் காங்கிரஸின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது வரி விதிப்பில் ஜனாதிபதிக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. எனினும், வரம்பற்ற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு காங்கிரஸ் வழங்கவில்லை. அத்தகைய நோக்கத்தை காங்கிரஸ் கொண்டிருக்கவில்லை.” என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

நியூயோர்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, உறுதி செய்துள்ள கூட்டாட்சி மேன்முறையீட்டு நீதிமன்றம், அதேநேரத்தில், மேன்முறையீட்டுக்கு ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை கால அவகாசமும் அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்துமானால், கூடுதல் வரி விதிப்பின் மூலம் பெறப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.

இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால் அது அமெரிக்காவை அழித்துவிடும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share This