Breaking -ரணிலுக்கு பிணை

Breaking -ரணிலுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபரை தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடல்நிலை காரணமாக  ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் zoom தொழினுட்பத்தினூடாக இணைத்துக்கொள்ளப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான்​ நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) காலை முன்னிலையான ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்  அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் அன்றிரவு ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நோய் நிலையை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள் கொழும்பு  தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரைத்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்கு அவர் மாற்றப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

ஜூன் மாதம் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான ஆவணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது

அதனைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

இந்தநிலையில் விசாரணை தொடர்பாக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share This