மைதானங்களின் புனரமைப்பை துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான 2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் பயன்பாடு குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்பான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இன்று (15) இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள 8 நிறுவனங்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அது தொடர்பான திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை உட்பட அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்காக முறையான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாததே இதுவரை காணப்பட்ட பிரச்சினை என்றும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அனைத்துத் துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக குறித்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் திருப்தியடைய முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டிற்குள் முறையாக நிறைவு செய்து மக்களுக்கு நன்மைகளை வழங்குவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குதல், விளையாட்டுடன் தொடர்புள்ள உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச அளவில் திறமையான வீரர்களை அடையாளம் காணும் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தினார்.
இதன்போது விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் விளையாட்டு சங்கங்களின் அதிகபட்ச பங்களிப்பைப் பெறவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.
இந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்வது விளையாட்டு வளர்ச்சிக்கு மட்டுமன்றி, நாட்டின் ஆரோக்கியம், சமூக நலன், குற்றங்களைக் குறைத்தல், போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்டல் , கூட்டு முயற்சியை உருவாக்குதல் மற்றும் துடிப்பான தொழில்படையை உருவாக்குதல் போன்ற பல நோக்கங்களை ஒரே நேரத்தில் அடையும் முதலீடாகும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
விளையாட்டுத் துறையில் ஆற்றல் மட்டும் போதாது என்றும், இந்த யுகத்தில் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் மிக முக்கியமான காரணிகளாகும் என்றும், எனவே, வீரர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குவது விளையாட்டு அமைச்சின் முன்னுரிமைப் பணியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தற்பொழுது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடுள்ள சுகததாஸ விளையாட்டரங்கு, கிளிநொச்சி மற்றும் மன்னார் உட்பட நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்குகளின் புதுப்பித்தல் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
விளையாட்டு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் விசேட கட்டுமானங்களுக்கு நிபுணத்துவ அறிவுள்ளவர்களை பணியமர்த்துதல், இந்த நோக்கத்திற்காக அரசாங்க தரப்பில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை நிறுவுதல் மற்றும் சர்வதேச அளவிலான ஆலோசனை சேவைகளைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டது.
பாடசாலை விளையாட்டு அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதற்காகத் தேவையான நிதியை ஒதுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேற்படி அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, விளையாட்டு மேம்பாட்டிற்கான புதிய விரிவான திட்டத்தை விரைவில் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்களின் பங்கேற்புடன் இளைஞர் விவகார அமைச்சினால் செயல்படுத்தப்படவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, சுகத் திலகரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபொன்சு, கபில ஜனக பண்டார மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.