இந்தியா மீது அமெரிக்கா மேலும் அதிக வரிகளை விதிக்கும் – டிரம்ப் நிர்வாகம் முடிவு

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கா இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்பின் முடிவைப் பொறுத்து இந்த முடிவு இருக்கும் என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறினார்.
“ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் நிலை வரிகளை விதித்துள்ளோம்.
விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்றால், பொருளாதாரத் தடைகள் அல்லது இரண்டாம் நிலை வரிகள் அதிகரிக்கக்கூடும்” என்று பெசன்ட் ப்ளூம்பெர்க்கிடம் தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதலாக 25 வீத வரியை டிரம்ப் விதித்தார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்கிறது, மேலும் ரஷ்யா அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு இந்தியா-அமெரிக்க உறவுகளை சீர்குலைத்து, அமெரிக்கா உடனான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகளை சீர்குலைத்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 2021 இல் வெறும் மூன்று வீதத்தில் இருந்து 2024 இல் 35 வீதம் முதல் 40 வீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலைவாசி உயர்வு இந்தியர்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதற்காக, மலிவான கச்சா எண்ணெயை வாங்குவது அவசியம் என்று கூறி, இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நியாயப்படுத்தியது.
இந்நிலையில், இந்தியா மீதான டிரம்பின் புதிய 50 வீத வரி ஓகஸ்ட் 27 முதல் நடைமுறைக்கு வர உள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு தடை விதிப்பதைப் போன்றது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவை ஆசியாவில் அதிக வரி விதிக்கப்படும் அமெரிக்க வர்த்தக பங்காளியாக மாற்றியுள்ளது.
மேலும், ஆடைமற்றும் நகைகள் போன்ற ஏற்றுமதி சார்ந்த தொழில்களை கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை அரை சதவீத புள்ளி வரை குறைக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.