ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெருந்தொகை பணம் மோசடி – தப்பியோடிய பெண்

ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்த கல்கிஸைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, இரண்டு வருட வேலை விசா வாங்கித் தருவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குறித்தப் பெண் பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கம்பளையில் வசிக்கும் ஒருவர், நவம்பர் 14, 2023 அன்று, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 500,000 ரூபாயை முதற்கட்டமாக செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
எனினும், அந்தப் பெண் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனவும் ஜப்பானில் வேலைவாய்ப்பை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி அவரருக்கு எதிராக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற முறையில் பலர் ஏமாற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது, மேலும் சந்தேக நபர் பின்னர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.