ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்
ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன.
சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் உதவுவதற்காக வட கொரியா ரஷ்யாவிற்கு 10,000 முதல் 12,000 துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவும் உக்ரைனும் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், மோதலில் வட கொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வார இறுதியில் உக்ரேனிய இராணுவத்துடனான மோதலின் போது சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குர்ஸ்க்கில் உள்ள மூன்று கிராமங்களைச் சுற்றி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக உக்ரேனிய ஊடுருவலைத் தடுக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு குர்ஸ்க் கிராமத்தைச் சுற்றி குறைந்தது மூன்று வட கொரிய வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவின் போரின் “முன்னணியில்” இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிரான “போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்” வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் சார்பாக வட கொரிய துருப்புக்கள் ஆதரவுப் பணிகளில் இருந்து நேரடிப் போராட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்களன்று இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தினார்.
வட கொரிய துருப்புக்கள் மோதலில் உயிரிழப்புகளை சந்தித்து வருவதாகவும், வட கொரியாவிற்கு வலுவான அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் பதிலிறுப்பை உறுதி செய்வதாகவும் கிர்பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென்டகன் பத்திரிகைச் செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குர்ஸ்கில் நடந்த போரில் சில வட கொரிய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளிப்படுத்தவில்லை.
வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பிற்கு உறுதியான ஆதரவை உறுதியளித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் போரிட வடகொரிய படைகள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.