மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்

மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

“பஸ் லலித்” எனப்படும் ஹன்வெல்லே லலித் கன்னங்கர இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த நபர் துபாயில் இருந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சாந்த முதுங்கொடுவ என்பவர் “பனா” என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

“ஹோமாகம ஹந்தயா” எனப்படும் மற்றொரு போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கரவுக்கும் ஹோமாகம ஹந்தயாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ நேற்று மதியம் மீகொடவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு குழு அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை நடந்த சிறிது நேரத்திலேயே தலங்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், கார் ஓட்டுநரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட 46 வயதான சாந்த முதுங்கொடுவ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வ ஜன பலய உள்ளிட்ட பல கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This