முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் பாதுகாப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதிகளின் சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பொதுமக்களின் பணம் செலவிடப்படுவதாகவும், அந்த தொகை 1448 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

“இன்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 228 இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நான்கு இராணுவ அதிகாரிகளும் 60 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாவலர்களாக உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 188 ஆயுதப் படை வீரர்களும், 22 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 பொலிஸாரும் 60 இராணுவத்தினரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஹேமா பிரேமதாசவிற்கு10 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, ​​அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த பதினொன்றரை மாதங்களில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 1448 மில்லியன் ரூபாவை செலவிட்டது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார்.

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு மூன்று முகவர் நிலையங்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளன. ஆயுதப்படை, பொலிஸ் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன இவ்வாறு பாதுகாப்பு வழங்கியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக கடந்த பதினொன்றரை மாதங்களில் மாத்திரம் ஆயுதப் படைகளினால் 328 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 327 மில்லியன் ரூபாவையும் செலவிட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் சார்பில் 55 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி 11 மாதங்களுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு 710 மில்லியன் ரூபா பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு 207 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆயுதப் படை சார்பில் ஆறு மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் சார்பில் 185 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகத்தினால் 16 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக ஆயுதப்படையினர் 258 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 39 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகம் 10 மில்லியன் ரூபாவும் என மொத்தம் 307 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முப்படையினர் சார்பில்19 மில்லியன் ரூபாவும், பொலிஸ் திணைக்களம் 60 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மூன்று மில்லியன் ரூபா என இந்த மூன்று மாதங்களுக்கு 82 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த பதினொன்றரை மாதங்களுக்குள் மக்களின் பணமான 1448 மில்லியன் ரூபாவை அரசாங்கம் இந்த ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளது. இது மிகவும் கடினமான சூழ்நிலை” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This