தாமதமாகும் அரசாங்கத்தின் அரிசி இறக்குமதி
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை, இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பதை தற்போது கூற முடியாது என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்டளவு அரிசித் தொகை தற்போது நாட்டிற்கு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் அரிசி எப்போது நாட்டிற்கு கிடைக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“இது வர்த்தக அமைச்சரிடம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி என நான் நினைக்கிறேன். எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது.” என அமைச்சர் கூறினார்.
எனினும், நீங்கள் விவசாயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர். அந்தக் கேள்வியில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். தற்போது நாட்டில் தேவையான அளவு அரிசி இல்லை. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிட்டாலும் அந்த விலைக்கு அரிசி வாங்க இடமில்லை. என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர்,
“இறுதியில் இந்த அரிசிப் பிரச்சினையில் ஜனாதிபதி வலுவாகத் தலையிட்டார். தற்போது அரிசி சந்தைக்கு வருகிறது. நாட்டுக்கு ஓரளவு அரிசி வந்துள்ளது. முன்பு போல் சிக்கலான சூழல் இல்லை.” என தெரிவித்தார்.