சலுகைகளை குறைத்தது அநுர அரசு!! நீதிமன்றம் செல்ல ரணில் – மைத்திரி கூட்டணி

சலுகைகளை குறைத்தது அநுர அரசு!! நீதிமன்றம் செல்ல ரணில் – மைத்திரி கூட்டணி

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டமூலம் வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த சட்ட மூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கே மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் நேற்று சந்தித்துக்கொண்ட இருவரும் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிட்டப்படடிருந்தது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த சட்டமூலம், 1986 ஆம் ஆண்டு 4 ஆம் எண் ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தை ரத்து செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சட்டமூலத்தின் கீழ், அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் வரி செலுத்துவோரின் செலவில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ குடியிருப்புகள், செயலக கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற வசதிகளுக்கு தகுதியுடையவர்கள்.

எனினும், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஐந்து முன்னாள் அரச தலைவர்களும் மாதத்திற்கு 97,500 ரூபா மாதாந்திர ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள்.

உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்களும் ரத்து செய்யப்பட உள்ளன.

சட்ட சவாலுக்கு முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள், பூட்டான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் முன்னாள் அரச தலைவர்கள் அனுபவிக்கும் சலுகைகளை மைத்திரி மற்றும் ரணிலை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழு பகுப்பாய்வு செய்து வருகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மற்ற நாடுகளில் வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து சேகரிக்கப்பட்ட தரவுகள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதிகளாக இருவருதட விவாதித்துள்ளனர்.

அண்டை நாடான இந்தியாவில், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் உட்பட முன்னாள் அரச தலைவர்கள் ஓய்வூதியம், வீடு, சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) மற்றும் பிற நெறிமுறைகளுக்கு உரிமை உண்டு.

இந்த கலந்துரையாடலில் சட்டத்தரணிகள் குழுவும் பங்கேற்றதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்ய அமைச்சரவை எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தார்.

அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் ஜனாதிபதி சலுகைகளில் சாத்தியமான திருத்தங்களை சித்ரசிறி குழு பரிந்துரைத்திருந்தது.

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக உறுதியளித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This