மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

இந்தியாவல் மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் மும்பை புறநகர் ரயில்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் 12 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.
இவர்களில் ஐவருக்கு மரண தண்டனையும் 07 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேன்;முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 12 பேரையும் விடுதலை செய்தது.
மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என். கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்றவாளிகளை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புவதற்கும் உத்தரவிட்டனர்.