மிராஸின் சகலதுறை அசத்தலில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

மிராஸின் சகலதுறை அசத்தலில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் மெஹ்தி ஹசன் மிராஸின் சகலதுறை அசத்தலால் ஏழு ஓட்டங்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூவகை கிரிக்கெட் தொடர்களில் முதலில் நிறைவுற்ற ஒருநாள் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 3-0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் அடுத்த தொடரான மூன்றுப் போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நேற்று இடம்பெற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பாட்டக் களம் நுழைந்த பங்களாதேஷ் அணிக்கு சௌமியா சர்கார் 43 ஓட்டங்களையும், மொஹ்தி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் அக்கீல் ஹொசைன் மற்றும் மெக்கேய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பங்களாதேஷ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 148 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாட களம் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பங்களாதேஷ் சுழல்பந்து வீச்சாளரான மெஹ்தி ஹசன் மிராஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஏழு ஓட்டங்களால் தோற்றுப் போனது.

துடுப்பாட்டத்தில் ரோமன் பவல் 60 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Share This