06 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றோரின் எண்ணிக்கை 150,000 ஐ அண்மித்தது

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 88,684 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 55,695 பெண் தொழிலாளர்களும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பிற்காக குவைட் நாட்டிற்கு சென்றுள்ளனர். இதன்படி, குவைட் சென்றுள்ள இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை 38,806 ஆகும்.
28,973 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும், 21,958 பேர் கட்டார் நாட்டிற்கும் வேலைவாய்ப்பிற்காக இந்த காலப்பகுதியில் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டிற்குச் 6,073 இலங்கை தொழிலாளர்கள், மற்றும் தென் கொரியா நாட்டிற்குச் 3,134 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்ட இலங்கை தொழிலாளர்கள் அமெரிக்க டொலர் 3.73 பில்லியன் அளவிலான பணப்பரிமாற்றங்களை (remittances) நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் அமெரிக்க டொலர் 635.7 மில்லியன் பணப்பரிமாற்றம் இலங்கை தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக அமெரிக்க டொலர் 7 பில்லியன் பணப்பரிமாற்ற வருவாயை நாடு பெற்றுக்கொள்ளும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.