சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்

தமிழநாட்டின் சென்னையில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 தாழ்தள மின்சார பேருந்துகளை உலக வங்கி உதவியுடன் கொள்வனவு முடிவு செய்யப்பட்டது.
697 கோடி ரூபா மதிப்பீட்டில் அதில் முதற் கட்டமாக 625 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது.
இதில் 400 ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பேருந்துகளை இயக்குவதற்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள பணிமனைகளை புதுப்பித்து அங்கு பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு வந்தது.
இப்போது வியாசர்பாடி பணிமனையில் 200.40 கோடி ரூபா மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பராமரிப்பு கூடம், புதிய மின் மாற்றிகள் பொருத்துதல், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர் அறை ஆகியவை புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
போக்குவரத்து துறை அமைச்சர் சா.கி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடிக்கு சென்று 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த பஸ்சில் ஏறி அதில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். முன்னதாக அங்கு 47.50 கோடி ரூபா மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 120 புதிய மின்சார பேருந்துகள் 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்துகளில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக இருக்கைகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர் எதிரே அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், லக்கேஜ் வைப்பதற்கான இடம், அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதற்கான ஒலி பெருக்கிகள், அவசர காலங்களில் அலாரம் ஒலிக்கக்கூடிய பொத்தான்கள், ஒவ்வொரு இருக்கையின்கீழ் சீட் பெல்டுகள், செல்போன்களுக்கான சார்ஜர் பாயிண்டுகள், எல்.இ.டி. விளக்குகள், சாரதிக்கு மின்விசிறி வசதி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி என ஏராளமான வசதிகள் இந்த மின்சார பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார பேருந்துகளை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீற்றர் வரை இயக்கலாம்.