இ.தொ.காவை மறுசீரமைக்கத் தீர்மானம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதற்கு குறித்த கட்சியின் தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் கொட்டகலையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகாத்தை பெறும் வகையில் கட்சியை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதமளவில் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமாகும்.
தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையோர்களை பதவிக்கு அமர்த்தி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று கட்சியை மீள பலப்படுத்தவுள்ளோம்” என்றார்.