புதிய ஜனநாயக முன்னணியிலும் தேசியப் பட்டியல் சர்ச்சை
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தரணி பைசர் முஸ்தப்பாவின் பெயர் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பைசர் முஸ்தப்பாவின் பெயரை வழங்குவது தொடர்பில் தம்முடன் கலந்துரையாடவில்லை என புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்துள்ள கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை நியமிப்பதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கப்பாடு தெரிவித்திருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பதிரண சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் சட்டத்தரணி பைசர் முஸ்தப்பாவின் பெயரும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்டது.
அதில் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்திற்காக, ரவீ கருணாநாயக்கவை நியமிக்க கட்சியின் செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததையடுத்து ஏனைய ஆசனத்தை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தப்பா இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதோடு பல அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.