போர் நிறுத்தத்திற்கு இந்தியா , பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பு

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் நடத்தப்பட்ட நீண்ட இரவுப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் இந்தியா கருத்து தெரிவிக்கவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா இலக்கு வைத்ததிலிருந்து இதுவரை சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்தது.
இந்நிலையில் பாகிஸ்தானும் தொடர் பதில் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.