ஐவருக்கு மரணதண்டனை

ஐவருக்கு மரணதண்டனை

2012 ஆம் ஆண்டு கொழும்பு – மட்டக்குளி பகுதியில் உள்ள கோவிலொன்றிற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு
கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதே குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மேலும் இரண்டு பிரதிவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்த போது இரண்டு பிரதிவாதிகளும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதன்படி, பிரதிவாதிகள் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு குற்றவாளியும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மற்றொரு குற்றவாளியும் தந்தை மற்றும் மகன் என்பது விசாரணையின் போது தெரியவந்தது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இரண்டு பிரதிவாதிகள் விசாரணைக்கு இடையே உயிரிழந்தனர்.

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மட்டக்குளி பகுதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததை அடுத்து, 21 வயது இளைஞரை விக்கெட் பொல்லுகள் மற்றும் தடிகளால் அடித்துக் கொன்றது உட்பட மூன்று
குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Share This