டெஸ்லா கார் விற்பனையில் பாரிய சரிவு – ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து பதவி விலகும் எலான் மஸ்க்

அமெரிக்கா அரசாங்கத்தின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முதல்நிலை செல்வந்தரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்றவற்றின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து இவர் தீவிர பிரசாரம் செய்தார்.
இந்நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் எலான் மஸ்க்கை நியமித்தார்.
அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், எலான் மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் பதவி காலம் மே மாதம் இறுதியில் முடிவடையவுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், அதற்கு முன்னதாகவே மஸ்க் இந்த பதவியில் இருந்து விலகுவார் என டிரம்ப் தன் அமைச்சர்களிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன் நிறுவனப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தவதற்காக மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் டெஸ்லா கார் விற்பனை 13 சதவீதம் சரிந்துள்ளது. இது டெஸ்லாவின் வரலாற்றில் மிகப்பெரிய சரிவாகும்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு எதிரான அதிகரித்து வரும் எதிர்ப்பு மற்றும் சந்தையில் அதிகரித்து வரும் போட்டி ஆகியவை நிறுவனத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா 336,681 கார்களை விற்பனை செய்ததாகவும், இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களை விட 50,000 குறைவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் மோசமான விற்பனையாகும்.
அமெரிக்க அரசாங்கத்தின் செயல்திறன் துறையின் தலைவராக மஸ்க்கின் நடவடிக்கைகள் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கொள்கைகளை எதிர்த்தவர்களிடமிருந்து டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
டெஸ்லா வசதிகள் மற்றும் கார்கள், மன்னேற்ற நிலையங்கள் உட்பட, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
எவ்வாறாயினும், டெஸ்லா தனது விற்பனை அறிக்கையில் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களைக் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.