மாத்தளை மாவட்டத்தில் நூறிற்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்பு

மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு வைத்திய அதிகாரி பிரிவுகளில், அதிகளவான வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குமுது பண்டார தெரிவித்தார்.
இதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை காலை (25.03.25) நிலவரப்படி சுமார் 150 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“மாத்தளை மற்றும் உக்குவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கந்தேநுவர மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் வயிற்றுப்போக்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
மாத்தளை பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் வெளி சிகிச்சை நிலையங்களில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகம், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கான மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அநுராதபுரம் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையுடன் கலந்துரையாடி வருகிறோம்.
நீரால் இந்நோய் பரவுகிறதா என ஆராய்ந்து வருவதுடன் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் நீர் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குடிநீரில் கவனம் செலுத்துமாறும், கொதிக்க வைத்த நீரையே குடிப்பதற்கு பயன்படுத்துமாறும் மக்களை அறிவுறுத்துகிறோம்” என்றார்.