முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு வட்டுவாகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல் பகுதியில் இறுதியாக இராணுவத்தினரிடம் தமது உறவுகளை கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியாக முன்னெடுத்து வரும் போராட்டம் இன்றுடன் 08 வருடங்களை அதாவது 2923 நாட்களை கடந்துள்ள நிலையில் அதனை அடையாளப்படுத்தும் வகையில் நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது சர்வதேசமே பதில் சொல், வட்டுவாகலில் போரின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது , சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம், கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும், உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு , போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, போராட்டத்தின் போது வட்டுவாகல் பாலத்தின் அண்மையாக அமைக்கப்படுள்ள சர்சைக்குரிய விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.