தேசபந்து தென்னகோனின் வரப்பிரசாதங்கள் இரத்து?

கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிறுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகளை நீக்கக் கோரி, பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசபந்து தென்னகோனுக்கு உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ வாகனம், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஊதியச் சலுகைகள் வழங்கப்பட்டன.
வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு சந்தேக நபரை கைது செய்யச் சென்றபோது, வெலிகம பொலிஸ் அதிகாரிகள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சண்டையில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை மீறி தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசபந்து தென்னகோனின் கையடக்கத் தொலைபேசித் தகவல்கள் மற்றும் அவர் இருக்கும் இடம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.