“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை

“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடத்தும் அனைத்து தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ஏற்கனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப், ஒருநாள் மற்றும் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கும் இந்தியாவை வழிநடத்தி அழைத்துச் சென்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த 2025 சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா பெற்ற முக்கியமான வெற்றியின் மூலம், ஐந்தாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

வேறு எந்த அணியும் மூன்று முறைக்கு மேல் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. 2022 பெப்ரவரியில் ரோகித் சர்மா தலைமைப் பெறுப்பேற்றதில் இருந்த இந்திய அணி ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளது.

மூன்று வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஐ.சி.சி போட்டிகளிலும் இந்தியா இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இதன் மூலம் சர்மா அந்த சாதனையை எட்டிய முதல் தலைவராக மாறியுள்ளார்.

வேறு யாராலும் முறியடிக்க முடியாத இந்த சாதனை, இப்போது சர்மாவை கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

ரோகித் சர்மாவின் தலைமையில், இந்தியா 2023 உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டியது, அந்தப் போட்டியில் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதே ஆண்டு, இந்தியா ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கும் தகுதிப் பெற்றிருந்தது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

தொடர்ந்து 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிப்பெற்றிருந்ததுடன், இறுதிப் போட்டியில் தென்னாப்பரிக்காவை வீழ்த்தி வெற்றியும் பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சம்பின்ஸ் கிண்ண தொடரில் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது.

இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி மூன்று வகையான ஐசிசி நடத்திய தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் கிண்ணத்தையும் கைப்பற்றியிருந்தார்.

2007 டி20 உலகக் கிண்ணம், 2011 ஒருநாள் உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றிகொண்டிருந்தது.

எவ்வாறாயினுமு், தோனி ஓய்வு பெறுவதற்கு முன்பு உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் (WTC)ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்திய அணியை உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் தலைவர் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This