தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா – சிறீதரனின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் நிலையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்காரவிடம் அவர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சிறிதரன்,
“தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பம் மிகவும் துயரத்துடன் வரவுக்காக காத்திருக்கின்றது.
தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலும் பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது சிறைச்சாலைகளில் எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலித்த நீதியமைச்சர், இது ஒரு மிகவும் தீவிரமான பிரச்சினை எனவும் இதற்கான உரிய பதில்களை வழங்க ஒரு வார காலவகாசமும் கோரினார்.