சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சாதனையுடன் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சாதனையுடன் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

பாகிஸ்தானின் லாகூரில் நேற்று (22) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்களை குவித்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இது சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தது, ஆனால் அவுஸ்திரேலியா அணி சில மணி நேரங்களுக்குள் அந்த சாதனையை முறியடித்திருந்தது.

47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டு இழந்து 356 ஓட்டங்களை குறித்து வெற்றியை பதிவுசெய்திருந்தது.

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்காக துரத்தி அடிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையையும் அவுஸ்திரேலியா முறியடித்தது.

இங்கிலாந்தின் 351 என்ற ஓட்டக் குவிப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை தொடக்க வீரர் பென் டக்கெட் வழங்கினார், அவர் 143 பந்துகளில் 165 ஓட்டங்களை குவித்திருந்தார். ஜோ ரூட் 68 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஒரு கட்டத்தில், 352 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது, ​​அவுஸ்திரேலியாவின் முதல் நான்கு விக்கெட்டுகள் 136 ஓட்டங்களுக்கு சரிந்தன.

இருப்பினும், களத்தில் சீராக செயல்பட்ட ஜோஷ் இங்கிலிஸ், 86 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும், அலெக்ஸ் கேரி 69 ஓட்டங்களையும் எடுத்து, ஐந்தாவது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்களை பகிர்ந்துக்கொண்டனர்.

போட்டியின் இறுதி ஓவர்களில், க்ளென் மேக்ஸ்வெல் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை குவித்திருந்தார்.

சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான மற்றொரு முக்கியமான போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது, மேலும் இந்தப் போட்டி விளையாட்டில் மட்டுமல்ல, புவிசார் அரசியலிலும் எதிரிகளாக இருந்து வரும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலானது.

2025 சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டிருந்தாலும், பாகிஸ்தானில் போட்டிகளை விளையாடுவதில்லை என்ற இந்தியாவின் கொள்கையின் காரணமாக போட்டி ஏற்பாட்டாளர்கள் போட்டியை துபாயில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Share This