பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அடுத்த மாதத்திலிருந்து கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது.
இதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 7,000 ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பனவொன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறோம்” என்றார்.
