ஸ்டாலின் தலைமையில்நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தமிழக வெற்றிக்கழகம் தீர்மானம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விசேட தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு விண்ணப்பம் கொடுக்கும் பணி எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் 04 ஆம் திகதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் ஆரம்பமாக உள்ளன.
இதற்கு தி.மு.க, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உட்பட
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பளித்து வருகின்றன.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு த.வெ.க.விற்கு தி.மு.க அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதிருக்கவும் தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்திருந்தால் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்று இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் நடந்த தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
