மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்றைய தினம்
நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து பாராட்டிய மாலைத்தீவு அமைச்சர், திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கைக்கு வரும் மாலைதீவு பிரஜைகளுக்கான விசா நடைமுறைகளை முறைப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த, சுமூகமான பயண நடைமுறைகளை எளிதாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை பிரதமரும் மாலைதீவு அமைச்சரும் இணக்கம் தெரிவித்தனர்.
மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.