க.பொ.த சாதாரண தரப்பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை, 3663 நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் குறித்த பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் தகுதிபெற்றுள்ளனர்.

இந்நிலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதற்கான வசதியினை WWW.Doenets. LK என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக வழங்குமாறு அதிபர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

Share This