உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு நாளை நாடாளுமன்றிற்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14.02) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி,எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் உரிய தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அடுத்தநாள் வேட்புமனுக்களை திரும்பப் பெற தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும்.
அதன்படி குறைந்த நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆனால் அன்றைய தினம் தேர்தலை நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 340 வகையான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதுடன், அதற்கு குறைந்தபட்ச கால அவகாசம் போதுமானதாக காணப்படாது.
அத்துடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு காரணமாகவும் குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு, ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உள்ளூராட்சி தேர்தலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.