இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பாரிய தொகை மஞ்சள், மண்டபம் வேதாளை கடற்கரை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள்
மூட்டைகள் கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படை அதனை இன்று (14) கண்டெடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் 40 கிலோ நிறையுடைய சுமார் 40 மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றின்
மொத்த நிறை 1600 கிலோகிராம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் பெறுமதி சுமார் 2.14 இலட்சம் இந்திய ரூபாய் என மதிப்பிப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் அண்மை காலமாக கடல் வழியாக சட்ட விரோதமான
முறையில் கடல் அட்டை, கஞ்சா, சமையல் மஞ்சள், சுக்கு, பீடி இலை, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்டவைகள்
அதிகளவில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தடுப்பதற்காக இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இலங்கை இந்திய கடற்படை மற்றும் கடலோரப்
பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.

Share This