நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜக பதில்

நீங்கள் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: கடிதம் எழுதிய முதல்வருக்கு பாஜக பதில்

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், ‘முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும்’ என்று பாஜக பதில் அளித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து தமிழக பா.ஜ.க, துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக, மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.

இது, தி.மு.க.,வினர் உட்பட அனைவருக்கும் தெரியும். ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி நாடகமாகி வருகிறார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை ஜனாதிபதி அநுர குமார, கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார். அதேபோல், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல், தன் அமைச்சர்களுடன், ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும்.

இலங்கை மக்கள், ஸ்டாலினை பார்த்து, ‘உங்கள் தந்தை கருணாநிதி, எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை, நீங்கள் வந்து கேட்கிறீர்களே; இது, உங்களுக்கே நியாயமா’ என்று கேட்பர். அப்போது தான், இலங்கை விவகாரத்தில், தி.மு.க., தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கச்சத்தீவை மீட்கக் கோரி, 2023 ஏப்., 19 மற்றும் 2024 ஜூலை 2ம் திகதி, பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். இந்த ஆண்டு ஏப்., 2ம் திகதி, கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் தீர்மானத்தை குறிப்பிட்டு, மீண்டும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன்பின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். இது பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நான்காவது கடிதம் ஆகும்.

இது தவிர, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில், 72 கடிதங்களை முதல்வர் எழுதி உள்ளார். அவற்றிலும், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )