உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு.. முதலிடத்தில் அயர்லாந்து – இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கத் தேவையான விசா நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் பெரும்பாலும் மக்களை அந்த விருப்பத்திலிருந்து பின்வாங்கச் செய்கின்றன.
எனினும், இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத நாடுகளும் உள்ளன. அங்குதான் அந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளின் மதிப்பைப் புரிந்துகொள்ள முடியும்.
2025 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற அந்தஸ்தை அயர்லாந்து தனி ஒரு நாடாக வென்றுள்ளது.
NOMAD passport indexஆல் வெளியிடப்பட்ட 2025 பட்டியலின்படி, அயர்லாந்து கடவுச்சீட்டு உலகின் ஏனைய அனைத்து நாடுகளையும் விஞ்சி இந்த சாதனையை படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. கிரீஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. போர்ச்சுகல் நான்காவது இடத்தில் உள்ளது. மால்டா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இத்தாலி, லக்சம்பர்க், பின்லாந்து, நார்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முதல் பத்து நாடுகளில் இடம்பெற்றன. பட்டியலில் முதல் ஒன்பது இடங்களையும் ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் அயர்லாந்து தனி நாடாக முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை. 2020 ஆம் ஆண்டில், அயர்லாந்து லக்சம்பர்க் மற்றும் ஸ்வீடனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது.
விசா இல்லாத பயணம், வரிவிதிப்பு, நாட்டின் உலகளாவிய பிம்பம், இரட்டை குடியுரிமைக்கான சாத்தியம் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை உலகின் சிறந்த கடவுச்சீட்டிற்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது.
அயர்லாந்து 109 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.
199 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இலங்கை இந்தப் பட்டியலில் 43.5 புள்ளிகளுடன் 168வது இடத்தில் உள்ளது. எவ்வாறாயினும் இந்தப் பட்டியலில் அமெரிக்கா 45வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.