காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு

தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் அகதியாக வந்திருப்பதாக கடலோர பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். தொடர்ந்து மத்திய, மாநில உளவு பிரிவு பொலிஸார் அவரிடம் தீவர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணை தகவல்களின் அடிப்படையில், குறித்த பெண் இலங்கை மன்னார் ஆண்டகுளம் பகுதியை சேர்ந்த விதுர்ஷியா (வயது 25) என்பது தெரியவந்துள்ளது.
அவர் ஏற்கனவே தனது தாய், தந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அகதிகள் முகாமில் வசித்ததும் தெரியவந்தது. அப்போது அவர், ஒரு இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி இந்தியா வர விதுர்ஷியாவுக்கு விசா கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும், தான் காதலித்த வாலிபரை கரம்பிடிக்க தமிழகம் வருவது என அந்தப் பெண் முடிவெடுத்து உள்ளார்.
இதற்காக அப்பெண் தனது நகையை விற்று இரண்டு லட்சம் ரூபாய் (இலங்கை பணம்) திரட்டி படகோட்டியிடம் கொடுத்து அவரது ஏற்பாட்டில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் படகில் ஏறி அரிச்சல்முனைக்கு தப்பி வந்ததாக தெரிவித்து உள்ளார்.
அந்த பெண்ணை இறக்கிவிட்டு படகோட்டி மீண்டும் இலங்கையை நோக்கி தப்பிச் சென்றுவிட்டதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அந்த பெண் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டார்.