இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன்படி, 133 ஓட்டங்கள் பின்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடவுள்ளது. ஜோய் டூட் மற்றும் ஓலி போப் ஆகியோர் களத்தில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடுகின்றனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே மூன்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், நான்காவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. மான்சஸ்டரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவெடுத்திருந்தது.
இதன்படி, முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்களை குவித்திருந்தது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 61 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
தவிர யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ஓட்டங்களையும், ரிசப் பந்த் 54 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் அந்த அணியின் தலைவர் பென் ஸ்டொக்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.