தேசபந்து தென்னகோன் நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாவார்?

வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், நாளை மறுதினம் வியாழக்கிழமை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (03) மாத்தறை கொட்டவிலயில் உள்ள பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாவார் என வெளியான செய்திகளுக்கமைய காலை முதல் நீதிமன்றத்தின் முன்னால் ஊடகவியலாளர்கள் தரித்திருந்துள்ளனர்.
எனினும், மாலை வேளை வரையில் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்கவில்லை.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தல் முன்னிலையாவார் என பலரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.
எனினும், வழக்கு திகதி எதிர்வரும் வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினம் பிரேரணை ஒன்றின் மூலம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வாய்ப்புகள் உள்ளதாக வெலிகம பொலிஸ் தலைமையகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக குறித்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.