“வெலிகம சஹான்” கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஹான் சிசிகெலம் எனப்படும் “வெலிகம சஹான்” நேற்று இரவு (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, சந்தேக நபர் நேற்று இரவு சென்னையில் இருந்து நாடு திரும்பியபோது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வெலிகமவைச் சேர்ந்த 31 வயதான “வெலிகம சஹான்” மீது மாத்தறை மற்றும் பாணந்துறை பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக களுத்துறை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் ஹரக்கட்டாவின் உதவியாளர் என்றும், மிதிகம சூட்டி மற்றும் குடு சலிந்து ஆகியோருக்காக முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவராகவும் செயல்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.