இணையத்தளம் முடக்கம்…சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விகடன் குழுமம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பட்டுள்ள நிலையில் இருந்ததை வெளிப்படுத்தும் கேலிச் சித்திரம் வரையப்பட்டமைக்கு எதிராக விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விகடன் ஊடகக் குழுமம் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.
இம் மாதம் 15 ஆம் திகதி முதல் விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விகடன் இணையத் தளத்தை மீட்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விகடன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
முதன் முதலில் இக் கார்ட்டூன் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையே முறைப்பாடு செய்துள்ளார்.
விகடன் இணையத்தளம் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சீமான் ஆகியோர் கண்டனம் தெரவித்தனர்.
இது தொடர்பில் விகடன் நிறுவனம் அதன் எக்ஸ் தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது,
‘விகடன் இணையத்தளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அதற்கான முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை.
பல ஆண்டுகளாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதுவரையில் அப்படித்தான் இயங்கியுள்ளோம் இனி மேலும் அப்படித்தான் இயங்குவோம். ஒருவேளை இந்த அட்டைப் படத்தின் காரணமாக மத்திய அரசால் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பின் அதனையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.