ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்

ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்ட விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை நாடாளுமன்றத்தினால் பதவியில் இருந்த தேசபந்து தென்னக்கோனை பதவி விலக்குகின்ற பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அதிகாரிகளை பதவியிலிருந்து விலக்குகின்ற சட்டம் முதன் முதலில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

இது 17 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதாவது அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டதன் பின்பு அந்த அரசியலமைப்பு பேரவையினால் பதவியில் அமர்த்தப்படும் இரண்டு அதிகாரிகளான சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபர் இவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழிமுறை ஒன்று இச்சட்டத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த இந்த சட்டம் முதன்முறையாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகவே இது ஒரு முக்கியமான விடயம். சுயாதீனமான இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் வேறு விதமாக பதவி நீக்கப்பட முடியாது.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது ஒருவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. அரசாங்கம் எதிர்க்கட்சி என்ற பிரிவினை இல்லாமல் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.

குறிப்பாக சிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கும்போது நாடாளுமன்றம் இரண்டாகப் பிரிந்தது அந்தப் பதவி நீக்க பிரேரணையானது தவறான முறையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ஆட்சி மாற்றத்தின் பின் தவறான பிரேரணை என்ற அடிப்படையில் அவர் மீளவும் பதவியில் அமர்த்தபட்டார்.

இம்முறை சுயாதீன பதவியில் உள்ள ஒருவர் எதேச்சதிகாரமாக பதவி நீக்கப்படாமல் விசாரணை குழு அறிக்கையினை வைத்து அதனை நாடாளுமன்றத்தில் விவாதித்து மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐநாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் அக்கடிதத்தில் தமிழரசுக்கட்சி கையொப்பமிடுமா? என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் என்பதல்ல அந்த கடிதம் எதற்காக செய்யப்படுகின்றது என்று விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்கள்.

கையொப்பமிடாத தரப்புகள் எல்லாம் தங்களுடைய பெயர்களை அதிலே இணைத்து விட்டார்கள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் அதனோடு ஈடுபடாமல் இருப்பது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகின்றோம்.

எங்களுடைய கூட்டத் தீர்மானத்தின் படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நாங்கள் சொல்லுகின்ற செய்தி சரியான முறையில் தெரிவிப்போம். உரிய நேரத்திலே அதனை செய்வோம் என்ற முடிவை எடுத்திருக்கின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலே தமிழரசு கட்சி தவறான நிலைப்பாடுகளை கொண்டிருக்காமல் பொதுவான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.

செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மனித என்புத் தொகுதிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன வன்முறைகள் போர் குற்றங்கள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறி சர்வதேச ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This