மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும்

மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும்

வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம்.

வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர்.

வடமாகாண சபை இயங்கிய கால பகுதியில் கூட அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவை எதனையும் சாத்தியமாக்க தெற்கில் உள்ள எவரும் விரும்பவில்லை.

எங்கள் மண்ணின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம், சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட அக்கடமி தேவை.

அதற்காக இலங்கை துடுப்பாட்ட சங்கத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுக்கள் நடாத்தி கோரிக்கைகளையும் முன் வைத்தும் அது ஏதேனும் சாத்தியமாகவில்லை.

தற்போது சர்வதேச மைதானத்தின் ஆரம்ப பணிகள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது வரவேற்க தக்கது. சர்வதேச தரத்திலான மைதானம் வரும் போதே, எமது வீரர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும்.

அது மாத்திரமின்றி பொருளாதார அபிவிருத்தியை நோக்கியும் நாம் முன்னேற முடியும். சர்வதேச மைதானம் அமையப்பெற்று, சர்வதேச போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், சர்வதேச வீரர்கள், ரசிகர்கள் என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

அதனூடாக எமது சுற்றுலா துறை முன்னேற்றம் அடையும். தற்போது எந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனை எதிர்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருவது கவலைக்குரிய விடயம்.

சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்க வேண்டும் .

மண்டைதீவில் மைதானம் அமைக்கப்படுவதால், சுற்று சூழலுக்கு பெரும் பாதகம் ஏற்பாடு என்பது எனது நிலைப்பாடு, அவ்வாறு பாதகம் இருந்தால், அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Share This