300 சிக்ஸர்கள்….. முதல் வீரராக விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனை

300 சிக்ஸர்கள்….. முதல் வீரராக விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை அடித்து தனித்துவமான புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கோலி, இதுவரை அந்த அணிக்காக 304 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

நேற்றையப் போட்டியில் கலீல் அகமது வீசிய மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம் வீரர் 300 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் நட்சத்திரம் கிறிஸ் கெய்ல் (பெங்களூரு) 263 சிக்ஸர்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா 262 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதனிடையே,, டி20 போட்டிகளில் ஒரே மைதானத்தில் 150 சிக்சர்கள் அடித்த சாதனையையும் கோலி படைத்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி இதுவரை 154 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

நேற்றையப் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 33 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஐந்து நான்கு ஓட்டங்கள் உட்பட 63 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதேவேளை, நேற்றையப் போட்டியில் பெங்களூரு அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்ததுடன், புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் நேற்றுடன் ஒன்பதாவது தோல்வியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This