
வெனிசுலா ஒருபோதும் சரணடையாது: இடைக்கால ஜனாதிபதி திட்டவட்டம்
வெனிசுலா ஆட்சியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்க படையினர், அவர்களை புரூக்ளின் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே, புதிய ஆட்சி அமையும் வரை, வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று ; டிரம்ப் அறிவித்தார்.
மேலும், ‘நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் மதுரோ எதிர்கொண்டதை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ரோட்ரிக்ஸை ஜனாதிபதி டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.
தொடர்ந்து, அமெரிக்காவுக்கு அதிக எண்ணெய் பீப்பாய்களை ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுலா மாறிவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வெனிசுலா ஆட்சியில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏதுமில்லை என்று அந்நாட்டின் இடைக்கால ஜனாதபதி தெரிவித்துள்ளார்.
“ வெனிசுலா அரசை சொந்த மண்ணை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். வேறு யாரும் இல்லை. நாங்கள் சரணடையவில்லை. ஒருபோதும் சரணடைய மாட்டோம். அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.
