அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்

இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே இந்த வரி எடுத்துக் காண்பிக்கிறது.
ஜனபதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள் இந்த வரி தெற்காசியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டாலும், இந்திய – சீன முரண்பாடுகள் அதற்குச் சாத்தியமானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே பிறிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொது நாணயத்தை உருவாக்குவது பற்றிய பேச்சுகள் வெற்றிபெறவில்லை.
ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அத்துடன் ஒற்றுமையாகச் செயற்படும் நாடுகள். இதனால் அமெரிக்க டொலருக்கு எதிரான யூரோ நாணயம் வெற்றிபெற்றது. ஆனால் பிறிக்ஸில் அங்கம் வகிக்கும் நாடுகள் மத்தியில் அவ்வாறன ஒற்றுமை ஒல்லை.
இந்த நிலையில், சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற ‘பிறிக்ஸ் பிரேசில் 2025’ என்ற இணையவழி பேட்டியில் பிரேசியல் நிதி அமைச்சின் சர்வதேச விவகாங்களுக்கான செயலாளர் டாட்டியான ரோசிட்டோ, ‘பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே தேசிய நாணயங்களை பயன்படுத்தும் யோசனையை முன்வைத்துள்ளார். பிரேசிலின் பொருளாதார அமைச்சு அதற்கான திட்டங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பிறிக்ஸ் நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யும்போது அமெரிக்க டொலரின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சிக்கு பிரேசில் ஆதரவளிக்கும் என்று கூறியிருக்கிறார். இதனை ரசிய ஊடகமான டாஸ் (TASS) வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி அறிவிப்புக்கு மத்தியில், தேசிய நாணயங்களை பயன்படுத்துவது பற்றி பேசியிருப்பது டொனல்ட் ட்ரம்ப்புக்கு சவாலாக இருக்கும் என்றும், தேசிய நாணயம் மட்டுமல்லாது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கிக்கு மாற்றாக, ”புதிய வளர்ச்சி வங்கி”
(New Development Bank – NDB) என்ற வங்கி ஒன்றை உருவாக்கவும் பிறிக்ஸ் நாடுகள் தீவிரமாக முயன்று வருவதாக இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
இப் பின்னணியிலேதான் தேசிய நாணயத்தில் வர்த்தகத்தை தொடங்குவது பற்றி பிறிக்ஸ் நாடுகள் ஏற்கெனவே பேசி வந்த நிலையில், இதற்கான சரியான தருணம் இதுதான் என்று டாட்டியானா ரோசிட்டோ கூறியிருக்கிறார். அநேகமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டில் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என ரசிய ஊடகங்கள் கூறுகின்றன.
ஆனால் பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்புக்கான ”பொது நாணயம்” பற்றிய பேச்சுக்கள் எழுந்த 2020 இல் இந்தியா அமைதி காத்தது. அது மாத்திரமல்ல பிறிக்ஸ் நாணயம் சாத்தியப்படக்கூடியதல்ல என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிடம் உறுதியாகக் கூறியிருந்தார்.
இப் பின்புலத்தில் இந்திய வர்த்தகச் செயற்பாடுகளில் தம்முடன் இணைந்திருக்கும் என்று நியுயோர்க் டைம்ஸ் செய்தி அப்போது வெளியிட்டிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெய்சங்கர் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிடம் பிறிக்ஸ் நாணயம் பற்றிய பேச்சில் இந்திய பங்கெடுக்காது என்று உறுதியளித்திருந்தார்.
இப் பின்னணியில் அதுவும் அமெரிக்க வரி விதிப்புக்குப் பின்னரான நிலையில், பிறிக்ஸ் நாடுகளின் தேசிய நாணயங்களை வர்த்தகச் செயற்பாட்டில் பயன்படுத்தலாம் என்ற யோசனை எவ்வளவு தூரம் சாதியமாகும் என்ற கேள்விகள் இல்லாமில்லை.
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச வர்த்தகம் பற்றி ஆய்வு செய்யும் அமைப்பான குளோபல் ரேட் றிசேச் இனிவேற்றீவ் (Global Trade Research Initiative) தரமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல துறைகளிலும் உற்பத்திகளை வேகப்படுத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்க வரி விதிப்பு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று அறிவுரை வழங்கியுள்ளது.
சீனா 32 வீதம், தைவான், 32வீதம் ஐரோப்பிய ஒன்றியம், 20 வீதம் இந்தியா 26வீதம், ஜப்பான் 24 வீதம், வியட்நாம் 46 வீதம், தாய்லாந்து 26 வீதம் பிரிட்டன் 10 விதம், இலங்கை 44 வீதம் என்ற அடிப்படையில் பெருமளவு வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடபட்டுக் கொண்டிருக்கும் இந்தியா உள்ளூர் உற்பதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை அமெரிக்க வரி தூண்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனாலும் இதற்காக இந்தியா மிகக் கடுமையாக தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றும், முக்கியமான துறைகளிலும் சொந்த உற்பத்தி என்பது மிகச் சுலபமானது அல்ல என்றும் இந்த நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
ஓட்டோ மொபைல் பாகங்கள் மற்றும் பொம்மை உற்பத்தி துறைகளில் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் முன்னிலை வகிக்கின்றன. ஆனாலும் இந்த உற்பதிகளுக்கு இந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கிறது.
இதனைச் சாதமாக்கி இந்தியா அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்தால் வரியின் பாதிப்பிலிருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியும் என்று மற்றொரு இந்திய பொருளியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளுடன் வா்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியங்கள் குறித்தும் இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் மிகவும் சிறிய அயல்நாடான இலங்கை 44 வீத விரியை எதிர் கொண்டிலுருக்கிறது.
ஆடை உறப்த்தி மாத்திரமே இலங்கையின் ஏற்றுமதியாகும். முன்னர் 12 வீதம் என்றிருந்த வரியை டொனால்ட் ட்ரம்ப் 44 வீதமாக உயர்த்தியதன் மூலம் இலங்கையின் ஆடை ஏற்றுமதி பாதிப்படையும் என பெருளாதார நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சா டி சில்வா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்திய மற்றும் பங்களாதேஸ் ஆடைகள் அமெரிக்க ஏற்றுமதியில் கூடுதல் பங்காற்றியிருந்தன. இலங்கையின் தைத்த ஆடைகளைவிடவும் இந்த நாடுகளின் தைத்த ஆடைகள் அமெரிக்க மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியிருந்த நிலையில் இந்த வரி அதிகரிப்பு இலங்கையைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இப் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இந்திய முதலீட்டாளர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தைத்த அடைகளுக்கு வேறு சர்வதேச் சந்தைகளை இலங்கை பெற முடியாத சூழல் இருப்பதாகவும் இந்திய ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை, குறிப்பாக சர்வதேசக் கடன்களை செலுத்த முடியாமல் 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் கோரியிருக்கும் இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி பெரும் பாதிப்பைச் செலுத்தும் என்பது பகிரங்கமான உண்மை.
இந்த நிலையில், கொழும்புக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேறு பொருளாதார சலுகைகளுக்கான உறுதிமொழி வழங்குவார் என அரசாங்கம் நம்புகின்றது.
ஏற்கனவே இந்தியாவுடன் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தாமல் தாமதிக்கப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படலாம் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
அதேநேரம் இலங்கை மீதான வரியைக் குறைப்பதானால் இலங்கையின் சில முக்கிய தளங்களை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டிய ஆபத்துகள் நேரலாம் என்ற அச்சங்களும் உண்டு.
எவ்வாறாயினும் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்த ஜேவிபி குறிப்பாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க வரிக்குப் பின்னரான சூழலில் இந்தியாவா? சீனாவா? என்ற திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.
அதாவது வர்த்தகச் செயற்பாடுகளில் சீனாவுடன் முழுமையாகச் செல்வாதா அல்லது இந்தியாவை நம்புவதா என்ற பெரும் குழப்பத்துக்குள் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
எண்பது வருட இனப் பிரச்சினைக்குரிய நிரந்த அரசியல் தீர்வை முன்வைத்து வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை முன்னேற்றக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஆனால் ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற கட்டமைப்பை மாற்றி பன்முகத் தன்மை கொண்ட அரசாக மாற்றாமல் அது சாத்தியமாகது என சிங்கள ஆய்வாளர் அசோன லியனகே 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனை அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் இனியாவது உணரத் தலைப்பட வேண்டும்.
அ.நிக்ஸன்