
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பின்னர், இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், அமெரிக்காவும் – இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும், அதே நேரத்தில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக மீளவும் திறக்கும்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் இந்தப் போர் நிறுத்தம் சாத்தியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு தரப்பினரும் விவேகத்துடன் செயல்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனைகள்
ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா ஈரான் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தும், ஈரான் ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கம்.
அதே நேரத்தில் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன, அவை தற்போது குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்மொழியப்பட்ட 10 அம்சத் திட்டம்
அல் ஜசீராவின்படி, ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவுகளில், அமெரிக்காவிடமிருந்து ஆக்கிரமிப்பு இருக்காது என்ற உத்தரவாதம், ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானின் வரையறுக்கப்பட்ட கண்காணிப்புடன் கூடிய போக்குவரத்து, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை அங்கீகரித்தல், ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல், ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் தீர்மானங்களை ரத்து செய்தல், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களைத் திரும்ப ஒப்படைத்தல், மற்றும் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்தின் மூலம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் ஆகியவை அடங்கும்.
ஊடக அறிக்கைகளின்படி, ஈரானின் அணு ஆயுதக் கையிருப்புப் பிரச்சினை எந்தவொரு இறுதி ஒப்பந்தத்திலும் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும்?
அரபு ஊடகங்களின்படி, நாளை வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் முறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் போது இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகையில், அடுத்த இரண்டு வாரங்கள் மத்திய கிழக்கு அமைதி, உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
