இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீமு தீவிரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மேலும், ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க 48 மணி நேரம் கெடுவைவும் அமெரிக்கா விதித்துள்ளது. அத்துடன், இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தையும் அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
இரு தரப்பும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தி, காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கும்.
பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழுவைக் கொண்டு காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். அந்த அமைப்பே காசாவில் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கும்.
அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும்.
பாலஸ்தீனிய ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இக்குழுவின் பணியாகும்.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்துக்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்துப் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.
போர் உடனடியாக நிறுத்தப்படும் போன்ற அம்சங்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.