ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்

ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த ஐ.தே.க பிரபலம்

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் லக்ஷ்மன் விஜேமான்ன இணைந்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்றது.

இதன்போது களுத்துறை மாவட்ட தலைவராக இருந்துவந்த லக்ஷ்மன் விஜயமான்ன நீக்கப்பட்டு, களுத்துறை மாவட்ட தலைவராக ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை களுத்துறை மாவட்டத் தலைவராக நியமிப்பதற்கு தனது எதிர்ப்பைத் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கட்சி தலைவர் ரணிலுடன் முரண்டு பட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சி களுத்துறை மாவட்ட தலைவராக நீண்ட காலமாக நான் செயற்பட்டு வருகிறேன். கட்சி வீழ்ச்சியடைந்த நிலையிலும் கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறேன்.

இந்நிலையில் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கும்போது எனக்கு அறிவிக்காமலே எனது பெயர் நீக்கப்பட்டு, ராஜித்த சேனாரத்னவுக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

ராஜித்த சேனாரத்ன காலத்துக்கு காலம் கட்சி தாவி வருபவர். ஆனால் நான் எப்போதும் இந்த கட்சியுனே இருந்து வந்துள்ளேன். கட்சி மீது நான் வைத்துள்ள விருப்பம் காரணமாக எந்த கஷ்டமான காலத்திலும் கட்சியைவிட்டு சென்றதில்லை.

அவ்வாறு நினைத்தே தற்போதும் என்னுடன் கலந்துரையாடாமல் களுத்துறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையால் விரக்தியடைந்திருக்கிறேன்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This