
மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை
வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது.
இந்நிலையிலேயே அவர் இன்று தமிழகம் வந்துள்ளார்.
காலை 10 மணிக்கு சென்னை வந்த அவர், தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்நிலையில், பிற்பகல் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்துக்கு சென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பழனிசாமியை, பியூஷ் கோயல் சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பியூஷ் கோயல் சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டில்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
