ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று கூறியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். ஊடக உரிமைக் குழுக்கள் மற்றும் பல நாடுகள் இந்த தாக்குதலைக் கண்டித்தன.
செய்தி சேகரிக்கும் போது பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் தீவிர அபாயங்களை கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன என்று ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார், போர் தொடங்கியதிலிருந்து காசாவில் குறைந்தது 242 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதுகுறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளரும் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக வேலை செய்வதையும் அச்சமின்றி அறிக்கையிடுவதையும் இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Reporters Without Borders அமைப்பும் இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களை “இராணுத்தினர்” என்று எவ்வித ஆதமாரமும் இன்றி பலமுறை முத்திரை குத்தியுள்ளதாக வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
“எந்தவொரு நம்பகமான ஆதாரத்தையும் வழங்காமல் பத்திரிகையாளர்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவதில் இஸ்ரேல் நீண்டகாலமாக ஆவணப்படுத்தப்பட்ட முறையைக் கொண்டுள்ளது” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) தெரிவித்துள்ளது.
சர்வதேச செய்தி நிறுவனங்கள் காசாவிற்குள் சுதந்திரமாக செய்தி சேகரிக்க இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கவில்லை, எனவே பல ஊடகங்கள் செய்திக்காக காசாவை தளமாகக் கொண்ட செய்தியாளர்களையே நம்பியுள்ளன. இவ்வாறான நிலையில், இந்த தாக்குதல் சம்பவம், உண்மையை வெளிக்கொண்டு வருகின்றமைக்கு எதிராக நடத்தப்பட்ட அடக்குமுறையாகவே பார்க்கப்படுகின்றது.